விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இப்பெண், கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இவரது வீட்டின் அருகே வசிக்கும் அனிதா என்ற தோழி, மதுரை மேலூரில் ஒரு மூதாட்டியைப் பராமரிக்கும் வேலை இருப்பதாகக் கூறி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார்.
அந்த எண்ணில் பேசிய நபர் மேலூருக்கு வருமாறு அழைத்ததை நம்பி, அந்தப் பெண் நேற்று முன்தினம் இரவு மேலூர் வந்துள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணைத் தாமரைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகிலுள்ள ஒரு கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த இளம்பெண்ணை மிரட்டிக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும், அவரிடமிருந்த அரை பவுன் தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரதா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த், வினித் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
