மழைக்கு பயந்து கடை வீதி கட்டிடத்தின் கூரை மீது ஏறிய ஆவாரம் மாடு நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் முசாபர்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையிலிருந்து தப்பிப்பதற்காக தெருவில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று, அங்குள்ள ஒரு கடையின் கூரை மீது திடீரென ஏறியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, விலங்கு நல ஆர்வலர் சன்னி சோப்ரா மற்றும் அவரது குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் மாட்டைப் பத்திரமாக கீழே இறக்க மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

மீட்புப் பணியின் போது எதிர்பாராதவிதமாக அந்த மாடு நிலைதடுமாறி கூரையில் இருந்து கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும், அதிர்ஷ்டவசமாக மாட்டுக்கு எந்தவொரு பலத்த காயமும் ஏற்படவில்லை; சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களுக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் அனைவரும் தப்பினர். பின்னர் அந்த மாடு பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகரின் கடை வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஆவார மாடுகளால் விபத்து அபாயங்கள் அதிகரிப்பதாகக் கூறி, அவற்றுக்கு நிரந்தரக் காப்பகங்கள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.