மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையோரம் நின்றுகொண்டு ரகளையில் ஈடுபடுவதும், சிலர் வயலுக்குள் புகுந்து அந்த இளம்பெண்ணை இழுத்து வந்து வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிச் செல்வதும் பதிவாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதத்தை இந்த வீடியோ கிளப்பியுள்ள நிலையில், இதன் பின்னணியில் பழங்குடியின சமூகத்தின் ஒரு விசித்திரமான பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது கடத்தப்பட்ட இளம்பெண்ணுக்குச் சில காலத்திற்கு முன்பு நிஹாலி கிராமத்தைச் சேர்ந்த ஹுகும் ராவத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. பழங்குடியின சமூகத்தில் நிலவும் ‘பேஜா’  என்ற வழக்கத்தின்படி, மணமகன் வீட்டார் மணமகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் மணமகள் வீட்டார் அந்தப் பெண்ணை கணவர் வீட்டிற்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஹுகும் ராவத், தனது மனைவியை அழைத்து வருவதற்காக 25 முதல் 30 நண்பர்களைத் திரட்டிக்கொண்டு இந்த துணிகரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து இதுவரை காவல் துறையில் இருதரப்பிலிருந்தும் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றாலும், வைரல் வீடியோவை தீவிரமாக எடுத்துக்கொண்டு போலீஸார் நடத்தி வருவதாக ராஜ்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இச்சமூகத்தில் திருமணத்தை அங்கீகரிக்க இந்த பணப் பரிமாற்ற வழக்கம் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டாலும், சட்டப்படி இது குற்றமாகும் என்பதால், கட்டாயக் கடத்தல் நிரூபணமானால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.