இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி குறித்துதான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேச்சாக இருந்தது. தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அணி நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், வைபவ் சூரியவன்ஷியால் தனது திறமையை நிரூபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

எதிர்கால இந்திய அணியின் நட்சத்திரமாகப் பார்க்கப்படும் அவர் மீது இந்தத் தொடரில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அயர்லாந்துக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானது முதல் அவர் ரன் குவிக்கக் கடுமையாகப் போராடி வருகிறார்.

ஐபிஎல் 2026 தொடரில் வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினர். அப்போது ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில், நெட் பயிற்சியின் போது ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சை வைபவ் மிக எளிதாக எதிர்கொண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டது ரசிகர்களைக் கவர்ந்தது. அதுமட்டுமன்றி, ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் அவர் அசால்ட்டாக சிக்ஸருக்கு விரட்டியிருந்தார்.

 

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டின் சூழல் முற்றிலும் வேறாக உள்ளது. இங்கிலாந்தின் வேகமான மற்றும் கூடுதல் பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களில், ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது வேகத்தையும் பவுன்ஸையும் சரியாகப் பயன்படுத்தி வைபவை சுதந்திரமாக விளையாட விடாமல் முடக்கினார்.

மூன்று டி20 போட்டிகளிலும் ஆர்ச்சர் வீசிய ‘ஷார்ட் பிட்ச்’  பந்துகள் வைபவை நிலைகுலையச் செய்தன. இந்தத் தொடரில் இதுவரை ஆர்ச்சர் வீசிய 13 பந்துகளில், 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள வைபவ், இரண்டு முறை அவரிடமே தனது விக்கெட்டையும் பறிகொடுத்துள்ளார். நெட்களில் அசத்திய இளம் வீரருக்கு, சர்வதேச ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற விஸ்வரூப சவாலை ஜோஃப்ரா ஆர்ச்சர் தன் பந்துவீச்சின் மூலம் புரிய வைத்துள்ளார்.