“ராமர் கோவில் உண்டியல்ல இருந்து திருடுன காணிக்கைப் பணத்தை வச்சு நாங்க சும்மா இருக்கலை.. அதை எங்க சொந்தக்காரங்களுக்கு வட்டிக்குக் கொடுத்து அதுல இருந்து இரட்டிப்பா சம்பாதிச்சு பல பேங்க் அக்கவுண்ட்ல மாத்தி வச்சிருக்கோம்!”
என்று அயோத்தி ராமர் கோவில் காணிக்கைத் திருட்டு வழக்கில் கைதான அனுகல்ப் மிஸ்ரா மற்றும் அவரது மைத்துனர் லவ்குஷ் மிஸ்ரா ஆகிய குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்துள்ள பகீர் வாக்குமூலம் ஒட்டுமொத்த ஆன்மீகப் பக்தர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அயோத்தி போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் ₹10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ₹2 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட காணிக்கைப் பணத்தை முதலில் தங்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, பின்னர் பல தனித்தனி பரிவர்த்தனைகள் மூலம் தங்களது சொந்தக் கணக்குகளுக்கு மாற்றி முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிரடி நடவடிக்கையில் போலீசார் தற்பொழுது இறங்கியுள்ளனர்.
மறுபுறம், இந்த ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) கொடுத்த அதிரடி ரிப்போர்ட்டின் அடிப்படையில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் புதிய பொறுப்பு பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகன் தலைமையிலான நிர்வாகம் ஒரு மிகப்பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா மற்றும் சிறப்பு அழைப்பாளர் கோபால் ராவ் ஆகியோரின் விஐபி தரிசன அனுமதிச்சீட்டு டிஜிட்டல் அடையாளங்கள் அதிரடியாக முடக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
இவர்களது டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி முறைகேடான வழிகளில் அதிக எண்ணிக்கையிலான சுகம் அல்லது விஐபி (VIP) சிறப்புத் தரிசன பாஸ்கள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இனி இவர்களது சிபாரிசில் யாருக்கும் விஐபி தரிசன பாஸ்கள் வழங்கப்படாது என்று அறக்கட்டளை திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் அயோத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
