ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அசைக்க முடியாத தூண்களாக விளங்கிய விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் நட்பு உலகறியது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தபோது, அவரது முடிவை விராட் கோலி கடுமையாக முயற்சி செய்தார் என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஸ்போர்ட்ஸின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஏபிடி, “ஆம், விராட் என்னை ஓய்வு பெற வேண்டாம் என்று அறிவுறுத்தினார். முடிவை அவர் மாற்ற முயன்றார், ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்சிபி அணியில் விளையாடியபோது ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ரசிகர்கள் காட்டிய பேராதரவு தமக்கு பெருமகிழ்ச்சியை அளித்தாலும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் மன அழுத்தம் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
“பெரிய போட்டிகளுக்கு முன்பாக எனக்கு தூக்கமே வராது. ரசிகர்கள் மற்றும் என் மீது நானே வைத்திருந்த எதிர்பார்ப்புகளின் சுமை சில நேரங்களில் மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது போல் இருக்கும்” என்று குறிப்பிட்ட டி வில்லியர்ஸ், சிகரத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு விடைபெற்றது சரியான முடிவு என்றும், தனது கிரிக்கெட் பயணம் குறித்து தமக்கு என்றும் பெருமையே என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
