மத்தியப்பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சோகமான சம்பவம், கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. நைகான் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி சிங்கராம் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அவரது 7-வது மாத கர்ப்ப காலத்திலேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதோடு உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு குடும்பத்தினர் பலமுறை அழைத்தும், உரிய நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, ஒரு தனியார் வாகனத்தில் அவரை முதலில் குதாஸில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால் அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரை பிச்சியாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப் பரிந்துரைத்தனர். மீண்டும் ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால், ரஜினியை ஒரு ஆட்டோரிக்ஷாவில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே ஆட்டோவிலேயே ரஜினிக்கு பிரசவம் நடந்து, அவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார்.

மேலும் துரதிர்ஷ்டவசமாக, பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த நான்கு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்து, தகுந்த சிகிச்சை கிடைத்திருந்தால் தன் குழந்தைகள் உயிர் பிழைத்திருக்கும் என ரஜினியின் கணவர் கணேஷ் சிங்கராம் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், மருத்துவ அதிகாரிகள் தரப்பில், குழந்தைகள் அனைத்தும் குறைப்பிரசவத்தில் தலா 1.5 கிலோ எடையுடன் மிகக் குறைந்த வளர்ச்சியுடன் பிறந்ததே அவற்றின் இறப்புக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது தாய் ரஜினி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சையில் உள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வப் புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் அளிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாம்தேவ் தோத்தே தெரிவித்துள்ளார்.