சென்னையில் மதுபான ஃபிளேவர் (Flavour) ஐஸ்கிரீம் விற்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய புகாரை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீமில் எந்தவிதமான மதுபானமும் கலக்கப்படவில்லை என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. உண்மைத் தன்மையை ஆராயாமல், சமூக வலைத்தளங்களில் இந்த ஐஸ்கிரீம் குறித்து தவறான தகவல்கள் காட்டுத்தீ போலப் பரவி பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், தனது கடையைப் பிரபலமாக்குவதற்காகப் பணம் கொடுத்து, “ஐஸ்கிரீமில் மதுபானம் கலக்கப்பட்டு விற்கப்படுகிறது” என்பது போன்ற பொய்யான விளம்பரத்தை அந்தப் பகுதி ரீல்ஸ் கிரியேட்டர்கள் மூலம் கடை உரிமையாளர் திட்டமிட்டுப் பரப்பியது அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பொதுமக்களிடையே வீண் வதந்தியை ஏற்படுத்தி, விளம்பரம் தேடிய கடை உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.
