நள்ளிரவு நேரம், பெட்ரோல் வண்டிகளே ஓட யோசிக்கும் அந்த வெறிச்சோடிய சாலையில், உணவு டெலிவரி செய்யும் தந்தை ஒருவர் தனது பிஞ்சு மகளைச் சுமந்துகொண்டு சைக்கிளிலேயே பயணிப்பதைக் கண்டு, அங்கிருந்தவர் ஒருவர் நெஞ்சு பொறுக்காமல் “என்ன விஷயம்?” என்று கேட்டுள்ளார். அவர் கேட்ட கேள்விக்கு, அந்தத் தந்தை சொன்ன பதில் ஒட்டுமொத்த இணையத்தையே கண்கலங்க வைத்துள்ளது. ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு தழுதழுத்த குரலில் அந்த தந்தை, “இவள் என்னுடைய மகள் சார். பிரசவத்தின் போது இவளது அம்மா இறந்துவிட்டார். எனக்கு என்று வேறு யாரும் இல்லை. இவளை வீட்டில் தனியாகவும் விட முடியாது, அதனால் இப்படி சைக்கிளிலேயே வேலைக்கு அழைத்து வருவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.

​முறையான பைக் கூட இல்லாமல், வறுமையின் காரணமாகத் தனது பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் சைக்கிளிலேயே அலைந்து டெலிவரி செய்யும் அந்தத் தந்தையின் நிலையைப் பார்த்து லட்சக்கணக்கான நெட்டிசன்கள் தங்களது வேதனையைத் தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கையின் ஆகப்பெரும் போராட்டத்தையும், ஒரு தந்தையின் தியாகத்தையும் அந்த ஒரு நிமிட மௌனமும், அவரோட சைக்கிள் பயணமும் உணர்த்திச் சென்றுள்ளது. சோசியல் மீடியாவில் இந்தச் சம்பவம் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அந்தத் தந்தைக்கு உதவிகள் பல தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன.