சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வினோதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், குளிர்பான பாட்டிலுக்காகப் பெண் ஒருவருக்கும் குரங்குக்கும் இடையே நடுரோட்டில் நடந்த பயங்கர சண்டை வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சுற்றுலா வந்த ஜப்பானிய இளம்பெண் ஒருவர் குளிர்பானம் குடித்தபடி ஜாலியாக நடந்து செல்கிறார். அப்போது திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று, அந்தப் பெண்ணின் கையிலிருந்த பாட்டிலைப் பறிக்க மல்லுக்கட்டுகிறது.

ஆனால் அந்தப் பெண் பாட்டிலைத் தர மறுத்து குரங்கை அடிக்க, ஆத்திரமடைந்த குரங்கும் அந்தப் பெண்ணைப் பளார் பளாரென அறைந்து, அவரது முடியைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்குகிறது.

ஒருவழியாக முதல் குரங்கிடமிருந்து வம்படி சண்டை போட்டுத் தனது குளிர்பானத்தைக் காப்பாற்றிவிட்டு அந்தப் பெண் நிம்மதியாக நடக்கத் தொடங்குகிறார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே, பின்னால் இருந்து நைசாக வந்த மற்றொரு குரங்கு அந்தப் பெண்ணின் கையிலிருந்த பாட்டிலை நொடியில் பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிறது. இந்த சுவாரசியமான வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோவை உற்று நோக்கிய நெட்டிசன்கள் இது முற்றிலும் உண்மை அல்ல என்று தெரிவித்துள்ளனர். குரங்கின் அசைவுகள் மற்றும் கிராபிக்ஸ் நுட்பங்களை வைத்துப் பார்க்கும்போது, இது 100 சதவீதம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது.

பொழுதுபோக்கிற்காக இது போன்ற வீடியோக்கள் ரசிக்கப்பட்டாலும், இதன் பின்னால் இருக்கும் ஆபத்துகள் குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், பொதுமக்களை எளிதாக ஏமாற்றுவதற்கும் ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனவே, சமூக வலைதளங்களில் வரும் அனைத்து வீடியோக்களையும் அப்படியே உண்மை என்று நம்பிவிடக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.