தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக்கட்டண விபரங்களை பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் (Notice Board) கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த முக்கிய ஆணையை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கான கட்டண விபரங்களை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளியிடக் கோரி நிர்பந்திக்கக் கூடாது என அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்ததோடு, சட்டப்படியே அறிவிப்பு பலகையில் கட்டண விபரங்களை வைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
