திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கணவன் தனது உண்மையான பாலின அடையாளத்தை  வெளிப்படுத்தியதும், அதை அவரது மனைவி கையாண்ட விதம் உலகளவில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இந்த தம்பதிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

அதோடு குழந்தை பிறந்த சில காலத்திற்குப் பிறகு, கணவன் தான் ஒரு ‘Gay’ என்ற அதிர்ச்சி உண்மையை மனைவியிடம் உடைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அந்த மனைவி கோபப்படவோ அல்லது அவரைப் பழிவாங்கவோ நினைக்கவில்லை.

மாறாக, இத்தனை வருடங்களாகத் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வாழ்ந்த கணவனின் மனவேதனையைப் புரிந்துகொண்டு, அவருக்கு முழு ஆதரவாக நிற்க முடிவு செய்தார். விவாகரத்து பெற்று பிரிந்தாலும், அவர்கள் இருவரும் தங்களின் நட்பை முறித்துக் கொள்ளவில்லை. தன் கணவனுக்குப் பொருத்தமான ஒரு ஆண் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இந்த மனைவி முன்நின்று உதவினார்.

தற்போது அந்த முன்னாள் கணவன், மனைவி மற்றும் அவருடைய புதிய ஆண் துணை ஆகிய மூவரும் ஒரே கூரையின் கீழ் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதோடு, தங்களின் குழந்தையை மிகச் சிறந்த முறையில் இருவரும் இணைந்து வளர்த்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கணவனின் உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்குப் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த மனைவியின் இந்த அசாதாரணமான செயல் சமூக வலைத்தளங்களில் பலரது கண்கள் மற்றும் நெஞ்சங்களை நனைய வைத்துள்ளது.