கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக நல்ல சம்பளம், பதவி உயர்வுகள் மற்றும் அடுக்கடுக்கான சலுகைகளுடன் பணிபுரிந்து வந்த சாரா வில்சின்ஸ்கா என்ற பெண், தனது ஆடம்பரமான கார்ப்பரேட் வேலையைத் திடீரென உதறிவிட்டு முழுநேர ஓவியராக மாறிய உத்வேகமளிக்கும் கதைதான் இது.
மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சான் டியாகோவிற்கு இடம்பெயர்ந்த சாரா, அங்குள்ள இயற்கை சூழலால் கவரப்பட்டு தனது பரபரப்பான வாழ்க்கையை முதன்முறையாகக் குறைத்துக் கொண்டார். காகிதத்தில் தனது வேலை மிகச்சிறப்பாகத் தெரிந்தாலும், மனதிற்குள் ஏதோ ஒரு வெறுமை இருப்பதை உணர்ந்த அவர், சத்தமில்லாமல் கூகுள் பணியில் இருந்து விலகினார்.
அதன்பின்னர் 2023-ல் தனது துணையுடன் சேர்ந்து தாய்லாந்தின் ‘கோ தாவ்’ என்ற சிறிய தீவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு எவ்வித திட்டமிடலும் இல்லாத ஓய்வு நேரத்தில், எவ்வித முறையான பயிற்சியும் இன்றி முதன்முறையாக வாட்டர்கலர் ஓவியங்களை வரையத் தொடங்கினார்.
அந்தத் தீவின் அழகிய தெருக்கள், கடைகள் மற்றும் இயற்கை காட்சிகளை அவர் வரைந்து உள்ளூர் முகநூல் குழுக்களில் பகிர்ந்தபோது, மக்கள் அதனைப் பாராட்டிப் பணம் கொடுத்து வாங்கத் தொடங்கினர். இதனால் உத்வேகம் பெற்ற சாரா, மீண்டும் அமெரிக்கா திரும்பி ‘ஸ்வில் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சொந்தமாக ஓவிய ஸ்டுடியோவைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போதைய வருமானம் கூகுளில் கிடைத்ததை விடக் குறைவு என்றாலும், தனது கலை பலரது மனதைத் தொடுவதே உண்மையான வெற்றி என அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
