சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி அருகே உள்ள பேரூர் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரில் சென்று  தினம் (06.07.2026) ஆய்வு செய்துள்ளார்.

இந்த அதிநவீன சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் அசுத்தமான கடல்நீரைத் தூய்மையான குடிநீராக மாற்ற முடியும். இந்த பிரம்மாண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 22.67 லட்சம் பொதுமக்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின்போது, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெறப்பட்ட தூய்மையான குடிநீரை முதல்வர் விஜய் அவர்களே நேரில் குடித்துப் பார்த்து, அதன் தரத்தைச் சோதித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) முதல் கோவிலஞ்சேரி வரை சுமார் 27.1 கிலோமீட்டர் தூரத்திற்கு ராட்சத குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதில், தற்போது வரை 7.74 கிலோமீட்டர் நீளத்திற்கான முதற்கட்ட குழாய் பதிக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இந்த அதிமுக்கிய திட்டத்தை எவ்வித தொய்வும் இன்றி, மிக விரைவாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.