மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பணத்திற்காகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் சாடியுள்ளார்.
வாய்க்கு வந்தபடி பேசாமல், இதற்கான தகுந்த ஆதாரங்களை உதயநிதி ஸ்டாலின் மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
மேலும், தேர்தலில் ஜெயித்துவிட்டு உடனடியாக சுயநலத்திற்காகக் கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்களின் போக்கு, வாக்காளர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும், இதனால் தேவையற்ற இடைத்தேர்தல் சுமைகள் மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், இடதுசாரிகள் தற்போது மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும், தாங்கள் எந்த அணியிலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து தங்களது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்கிற புதிய அரசியல் ட்விஸ்ட்டையும் அவர் உடைத்துள்ளார்.
மறுபுறம், ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த சண்முகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னர் மாளிகைக்கு மக்கள் வரலாம் என அழைப்பது முறையல்ல என்றும், தற்போதைய ஆளுநரின் போக்கு முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை நினைவூட்டுவதாகவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
