அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நாட்டுக்கு புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கின் போது, அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த தலைமையையும் ஒரே ஒரு தாக்குதலில் தம்மால் முற்றிலுமாக அழித்திருக்க முடியும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆக்ஸியோஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தான் இருந்தார்கள், நினைத்திருந்தால் மிச்சமிருக்கும் அனைத்தையும் காலி செய்திருக்கலாம். ஆனால், போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே ஒருவராவது உயிரோடு வேண்டுமே என்பதற்காகவே நான் அந்த தாக்குதலை நடத்தவில்லை என்று  கூறியுள்ளார்.

மேலும், ஈரான் தரப்பு தப்பியோட வழிதேடி தற்போது தங்களை போர்நிறுத்தத்திற்கு கெஞ்சி வருவதாகவும், காமேனியின் இறுதிச்சடங்கு காரணமாகவே ஒரு வாரத்திற்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்த போரின் முதல் தாக்குதலிலேயே, ஈரானின் உச்ச தலைவரை அமெரிக்கா கொன்றது. அமெரிக்கா நினைத்தது போல இந்த போர் எளிதாக முடியவில்லை. மாறாக, ஈரான் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுத்து திணறடித்தது. இதற்கிடையே, கொல்லப்பட்ட தங்கள் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ஈரான் மக்கள் திரண்டு கண்ணீர் வடித்ததைக் கண்டு டிரம்ப் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மக்கள் தங்கள் தலைவரை வெறுப்பார்கள் என்று தாம் நினைத்ததாகக் கூறிய டிரம்ப், “அவர்கள் அழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஒருவேளை அவர்கள் போலியாகக் கூட அழுதிருக்கலாம்” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். உலக நாடுகளையே உற்று நோக்க வைத்துள்ள இந்த இறுதி ஊர்வலக் கூட்டமும், அமெரிக்க அதிபரின் இந்த பகீர் கருத்தும் தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.