உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு காலனியில், சினிமா படங்களை மிஞ்சும் வகையில் 9 வயது சிறுவன் ஒருவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அயன் என்ற சிறுவன், வெள்ளிக்கிழமை மாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு குட்டிப் பாம்பை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை ஒரு பெரிய பாம்பு கடித்த சத்தம் கேட்டுப் பெற்றோர் எழுந்தபோது, அந்தப் பாம்பு நாலி வழியாக வேகமாகத் தப்பி ஓடியதைக் கண்டுள்ளனர்.

உடனடியாகச் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவத்தை அடுத்து, கொல்லப்பட்ட குட்டிப் பாம்பிற்காகத்தான் ‘நாகின்’ நள்ளிரவில் வந்து பழிவாங்க என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பேசி வருகின்றனர்.

இருப்பினும், அறிவியல் மற்றும் உயிரியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பாம்புகளுக்குப் பழிவாங்கும் குணமோ அல்லது மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கோ நினைவாற்றல் கிடையாது என்றும், இது ஒரு துரதிர்ஷ்டவசமான தற்செயல் நிகழ்வு மட்டுமே என்றும் விளக்கப்படுகிறது.

குறிப்பாக, மழைக்காலத்தில் குட்டிப் பாம்புகள் இருக்கும் இடங்களில் பெரிய பாம்புகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதே போன்று உத்தரபிரதேசத்தின் மற்ற ஒரு பகுதியிலும், காலையில் வீட்டைப் பெருக்க முயன்ற சோனி என்ற பெண்மணி, துடைப்பத்திற்குள் மறைந்திருந்த பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நல்வாய்ப்பாகச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்துள்ளார்.

இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, மழைக்காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.