இன்றைய நவீன உலகிலும் பலர் சிறிய உடல்நலப் பிரச்சினைகளைக் கூட மூடநம்பிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அப்படி கண் துடிப்பதை நல்ல சகுனம் அல்லது கெட்ட சகுனம் என்று நம்பி, இணையத்தில் பார்த்த தவறான ஆலோசனையைப் பின்பற்றிய சீன நபர் ஒருவர், தனது கண் பார்வையையே இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்ட வினோத விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரைச் சேர்ந்த லே என்ற நபருக்கு, கடந்த சில நாட்களாக வலது கண் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருந்துள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரணப் பிரச்சினை என்று நினைத்த அவர், சீனாவில் நிலவும் ஒரு மூடநம்பிக்கையின் படி, “இடது கண் துடித்தால் நல்லது, வலது கண் துடித்தால் கெட்ட சகுனம்” என்பதை நினைத்து கடும் பயமடைந்துள்ளார்.

இதற்காக மருத்துவரிடம் செல்வதை விடுத்து, இணையத்தில் தீர்வு தேடியுள்ளார். அங்கு, “கண்ணைச் சுற்றி லேசாகத் தட்டினால் அல்லது அடித்தால் கண் துடிப்பது நின்றுவிடும்” என்ற தவறான ஆலோசனையைக் கண்டுள்ளார். அதை அப்படியே நம்பிய அவர், தொடர்ந்து மூன்று நாட்களாகத் தனது கண்ணைச் சுற்றிலும் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டுள்ளார். கொஞ்ச நேரத்தில் கண் துடிப்பது நின்றாலும், அவரது கண் பார்வை மங்கலாகத் தொடங்கி, ஒரு கட்டத்தில் கண்ணே தெரியாமல் போயுள்ளது.

பதறியடித்துக்கொண்டு அவர் மருத்துவமனைக்கு ஓடியபோது, பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அடி பலமாக விழுந்ததால், அவரது கண்ணின் விழித்திரை முற்றிலும் கிழிந்து, தன் இடத்தை விட்டு விலகியிருந்தது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து கண் பார்வையை ஓரளவுக்குக் காப்பாற்றினர். கண் துடிப்பதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக நேரம் மொபைல்/லேப்டாப் பார்ப்பது, காஃபின் அதிகமாகக் குடிப்பது போன்றவையே காரணம் என்றும், அதற்குப் போதிய ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும் என்றும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். இணையத்தில் வரும் அரைகுறை மருத்துவக் குறிப்புகளையும் மூடநம்பிக்கைகளையும் நம்பி, கண்களைப் போன்ற உணர்திறன் மிக்க உறுப்புகளில் விளையாடக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.