மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், காதலியுடன் காரில் சென்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரை 14 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வைத்து பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் போக்குவரத்து போலீசாகப் பணியாற்றி வரும் 35 வயதான குர்னால் சிங் என்பவர், கடந்த 28-ஆம் தேதி தனது காதலியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த சிலர் திடீரென குர்னால் சிங்கின் கார் மீது மோதினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், என்ன நடந்தது என்று கேட்பதற்காகக் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

அவர் கீழே இறங்கிய அடுத்த கணமே, பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த 14 பேர் கொண்ட ஒரு கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்து குர்னால் சிங் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காதலியின் கண் முன்னாடியே நடுரோட்டில் நடந்த இந்த கொடூரத் தாக்குதலில் குர்னால் சிங் ரத்த வெள்ளத்தில் சரிந்து படுகாயமடைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட 14 பேரையும் அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்த 5 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். போலீஸ் அதிகாரி என்று கூடப் பார்க்காமல் நடுரோட்டில் வைத்து கும்பல் கொடூரமாகத் தாக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் லேசாக உரசியது தொடர்பான தகராறில் இந்த பயங்கரம் நடந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.