தமிழ் திரையுலகின் மூத்த கலைஞரான நடிகர் சிவகுமார், 84 வயதிலும் இடி முழக்க குரலோடும், அசாத்திய உடல் ஆரோக்கியத்தோடும் வலம் வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில், இந்த முதுமையிலும் தான் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஃபிட்னஸ் ரகசியத்தை அவரே ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.
“நான் தினமும் 2 லிட்டர் தண்ணீராவது குடிப்பேன், அது உடம்பில் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றிவிடும்; அதேபோல் 40 முதல் 45 நிமிடங்கள் வரை தினமும் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்துள்ளேன்” என்று தன் ஆரோக்கியத்தின் முதல் படியைக் கூறியுள்ளார். மேலும், கணினி முன்னால் வேலை பார்ப்பவர்கள் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ள சிவகுமார், தனது ஸ்பெஷல் வாக்கிங் ரகசியத்தையும் உடைத்துள்ளார்.
“தினமும் காலையில் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு, சட்டையில்லாமல் வீட்டு மொட்டை மாடியில் நடப்பேன், இதனால் தோல்கள் மூலமாக உடம்புக்குத் தேவையான வைட்டமின்-டி சத்து நேரடியாகக் கிடைப்பதுடன் வியர்வை வழியாக நச்சுக்கள் மொத்தமும் வெளியேறிவிடும்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இந்த எளிய மற்றும் பவர்ஃபுல் டிப்ஸ் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
