இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், பார்ம் இல்லாத சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ்.பத்ரிநாத் வலியுறுத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் சிறந்த வீரராகத் தேர்வான பிறகு, சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் அவர் முறையே 5, 0 மற்றும் 1 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஒரு வீரர் தனது வாழ்நாளின் சிறந்த பார்மில் இருக்கும்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தற்போது வைபவ் சூர்யவன்ஷி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதால், அவரை அணியில் சேர்ப்பதே சரியான முடிவாக இருக்கும் என்றும் பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ‘மோஸ்ட் வேல்யூபில் பிளேயர்’ விருதை வென்றது மட்டுமின்றி, ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய சாதனையும் வைபவ் படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் ஆக்ரோஷமான ஆட்டமும், வெற்றிபெற வேண்டும் என்ற தீவிரமும் குறைவாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய பத்ரிநாத், தொடக்க வரிசையில் வைபவ் போன்ற அதிரடி வீரர் களமிறங்கினால் அந்தப் பிரச்சனை தீரும் என்று நம்புகிறார்.
சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என்றாலும், பார்மில் இருக்கும் ஒரு இளம் திறமைசாலி வெளியே அமர்ந்திருப்பது குறித்து அணி நிர்வாகம் கட்டாயம் யோசிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
