நாகரிகம் அடைந்த இந்த காலத்திலும் மனிதர்களின் குணத்தைப் பார்க்காமல், தோலின் நிறத்தை வைத்து மதிப்பிடும் கொடூரமான ‘நிறவெறி’ இன்னும் மாறவில்லை என்பதற்கு சான்றாக பீகாரின் முசாபர்பூரில் ஒரு நெஞ்சை உலுக்கும் சோகம் நடந்துள்ளது. அங்குள்ள 22 வயது இளம்பெண்ணிற்கு கடந்த மூன்று வருடங்களாக, அதாவது அவருக்கு வெறும் 19 வயதிருக்கும் போதிலிருந்தே பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர்.
ஆனால், அந்தப் பெண்ணின் நிறம் கொஞ்சம் கறுப்பாக இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக, வந்த 10-க்கும் மேற்பட்ட திருமண வரன்கள் அடுத்தடுத்து அவரை நிராகரித்துள்ளன. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும், “நமக்கு கல்யாணமே ஆகாதோ” என்ற விரக்திக்கும் ஆளான அந்தப் பெண், ஜூன் 1-ஆம் தேதி காலை தன் அறையிலேயே தற்கொலை செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தடய அறிவியல் நிபுணர் (FSL) குழுவும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அறிந்த நெட்டிசன்கள், “கல்யாணம் ஆகவில்லை என்று உயிரை விட 22 வயது என்ன வாழ்நாளின் இறுதி வயதா? சாதிக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு விபரீத முடிவா?” என்று அந்தப் பெண்ணுக்காக ஆதங்கப்படுவதோடு, வெறும் தோலின் நிறத்தை வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், சுயமரியாதையையும் சிதைக்கும் இந்த சமூகத்தின் நிறவெறி புத்தியைக் கடுமையாகச் சாடி கமெண்ட் செய்து வருகின்றனர்.
