நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் தனது திருமண வாழ்க்கை குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, திருமண பந்தத்தில் நுழைவதில் தனக்குச் சில தயக்கங்களும் குழப்பங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவர், இப்போது தனது பார்வையை மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
‘கட்டா குஸ்தி 2’ படத்தில் குழந்தையுடன் நடித்த காட்சிகள் தனக்குள் தாய்மை உணர்வை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “அந்தப் படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக நடித்தபோது, எனக்குள் ஒருவிதமான தாய்மை உணர்வு விழித்துக்கொண்டது. அதன் பிறகு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை நான் வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன்.
எனக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை என்பவர், நல்ல கணவராக மட்டுமன்றி, வருங்காலத்தில் பிறக்கும் என் குழந்தைக்கு ஒரு சிறந்த தந்தையாகவும் இருக்க வேண்டும். என்னைப் புரிந்துகொண்டு, முழு நம்பிக்கையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருவரைத்தான் நான் வாழ்க்கைத் துணையாக எதிர்பார்க்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
