விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டிகளின் போது அணியும் அந்த ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ போன்ற கருவி ‘ஜிபிஎஸ் டிராக்கிங் வெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
இது பார்ப்பதற்குச் சாதாரணமான ஒன்றாகத் தெரிந்தாலும், உண்மையில் இது ஒரு உயர் ரக தொழில்நுட்பமாகும். இந்த ஆடையின் பின்புறம், இரு தோள்களுக்கு இடையே சிறிய பையில் டென்னிஸ் பந்தை விட எடை குறைந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். விராட் கோலி, லயோனல் மெஸ்ஸி போன்ற முன்னணி வீரர்கள் இதைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
இது வீரர்கள் விளையாடும்போது அவர்களின் வேகம், ஓடிய தூரம், இதயத் துடிப்பு மற்றும் உடலில் ஏற்படும் சோர்வு ஆகியவற்றைத் துல்லியமாகத் திரட்டித் தரவுகளை வழங்குகிறது.
இந்தத் தரவுகளைப் பயிற்சியாளர்கள் நிகழ்நேரத்தில் கவனிப்பதன் மூலம், வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களைத் தவிர்க்கவும் முடிகிறது.
2000-ஆம் ஆண்டு வாக்கில் கேட்டாபல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், இன்று உலகெங்கிலும் உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு அணிகளில் பயன்படுத்தப்படுகிறது.
வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாகப் பகுப்பாய்வு செய்து, அவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்த இந்த ஜிபிஎஸ் வெஸ்ட் நவீன விளையாட்டு உலகில் ஒரு புரட்சிகரமான கருவியாக மாறியுள்ளது.
