வேலூர் மாவட்டம் ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவரும், தனலட்சுமி என்பவரும் (36) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனலட்சுமியைக் காணவில்லை என விஜயகுமார் நாடகமாடி வந்த சூழலில், அவரது வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டின் சமையலறை பரணில் ஒரு அரிசி சாக்கு மூட்டைக்குள் தனலட்சுமி முகம் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது இரு கைகளின் மணிக்கட்டு நரம்புகளும் அரிவாளால் அறுக்கப்பட்டிருந்ததோடு, கால்கள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டிருந்த கொடூரக் காட்சி போலீஸாரையே உலுக்கியது. இதையடுத்து, தலைமறைவாக முயன்ற கணவர் விஜயகுமாரைப் பிடித்து போலீஸார்  விசாரித்த போது, நெஞ்சைப் அதிர்ச்சி  வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார்.

கைதான விஜயகுமார் போலீஸாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், “என் மனைவி தனலட்சுமிக்கு குமரேசன் (25) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. வீட்டு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, 3 நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாள். கள்ளத்தொடர்பைக் கைவிடுமாறு சொன்னால் என்னை ஆபாசமாகத் திட்டுவாள். கடந்த 28-ஆம் தேதி என் மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது , என்னை பார்த்து ‘நீ ஆம்பளையா?’ எனக் கேட்டு அவமானப்படுத்தினாள். இதனால் ஆத்திரமடைந்த நான், ஒரு அரிவாளை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்தேன். அன்று இரவு கள்ளக்காதலனுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினாள். இது பற்றி  கேட்டபோது, ‘குமரேசனும் நானும் உல்லாசமாக இருந்துவிட்டு வரோம், நீ சரியில்லைனா நான் என்ன பண்ண முடியும்? நீ ஒரு ஆம்பளையா?’ என மீண்டும் கேட்டு என் ஆண்மையைக் கேலி செய்தாள்.

இதனால் அரிவாளை எடுத்து அவளது இரு கைகளின் மணிக்கட்டுகளையும் வெட்டினேன். ரத்த வெள்ளத்தில் அவள் சுவரில் மோதி மயங்கி விழுந்ததும், கால்களை சார்ஜர் ஒயரால் கட்டி, முகத்தைத் துணியால் இறுக்கிப் படுகொலை செய்தேன். பின்னர் சடலத்தைச் சாக்கில் கட்டி நள்ளிரவே  ஒளித்து வைத்துவிட்டு, ரத்தக்கறைகளைத் துடைத்துவிட்டு பிள்ளைகளுடன் தூங்கினேன். மறுநாள் காலையில் பிள்ளைகளுக்கு வழக்கம் போல் சமைத்துப் போட்டு பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியைக் காணவில்லை என நாடகமாடினேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து விஜயகுமாரைக் கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். பெற்ற தாயைக் தந்தை கொன்றதாலும், தந்தை சிறைக்குச் சென்றதாலும் அவர்களது 3 பிள்ளைகளின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.