பிலிப்பைன்ஸ் நாட்டின் காவிதே மாகாணம், ஜெனரல் ட்ரியாஸ் நகரில் உள்ள ‘பெத்தேல் அகாடமி’ என்ற தனியார் பள்ளியில் நெஞ்சை பதறவைக்கும் வன்முறைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி, யாரும் எதிர்பாராத விதமாக கத்தியுடன் 5-ஆம் வகுப்பு படிக்கும் பிஞ்சுக் குழந்தைகள் இருக்கும் வகுப்பறைக்குள் நுழைந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள், அங்கிருந்த 10 மற்றும் 11 வயதுடைய 7 சிறுவர்களை அந்த மாணவி சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரு சிறுவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்ததால், அவர்களுக்கு அவசரப் பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரச் சம்பவத்தின் போது, பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால், வகுப்பறையில் இருந்த மாணவர்களைக் கண்காணிக்க யாரும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் கொடூரமான பின்னணி வீடியோக்கள் தற்போது சமூக வலைதளமான ‘X’ தளத்தில் வெளியாகி, உலகளவில் பெரும் அதிர்வலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
14yo deranged knifegirl stabs 7 preteen pupils in insane vid pic.twitter.com/ZAZfdSgfkF
— RT Intl (@RT_on_X) July 2, 2026
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து பிலிப்பைன்ஸ் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய 14 வயது மாணவி அந்தப் பள்ளிக்குச் சமீபத்தில் தான் புதியதாக மாறியுள்ளார் என்பதும், பாதிக்கப்பட்ட 5-ஆம் வகுப்பு சிறுவர்கள் எவரையும் அவருக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கிடையேயான ரவுடித்தனம், கேலி வதை அல்லது குழு மோதல்கள் போன்ற எந்தப் பின்னணியும் இந்த சம்பவத்தில் இல்லை எனப் போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அந்த மாணவிக்கு ஏதேனும் மனநலப் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நீடிக்கிறது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள காவல்துறைத் தலைவர் ஜெனரல் ஜோஸ் மெலென்சியோ நார்டாடெஸ், இனிவரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உள்ளூர் அரசுடன் இணைந்து பள்ளிகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
