திமுகவின் மூத்த அரசியல் பிரமுகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்பி) திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகன் மீது, சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ தம்பதியிடம் 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 26 சவரன் தங்க நகைகளை மோசடி செய்ததாக சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் அதிரடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அயனாவரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் வீனா விலாசினி அளித்துள்ள அந்த புகாரில், திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் முத்துக்குமார் ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடன் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நீண்ட கால நட்பைப் பயன்படுத்தி, அவசரத் தேவை என்று கூறி முத்துக்குமார் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு காயத்ரி சிவா தனது குடும்பத் தேவைக்காக அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், நகைகளை அடமானம் வைக்க வேண்டும் என்றும் கூறி மொத்தம் 50 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளார். இதில் பின்னர் 24 சவரன் நகைகளை மட்டும் திருப்பித் தந்த தம்பதியினர், மீதமுள்ள 26 சவரன் நகைகளையும், வாங்கிய 10 லட்சம் ரூபாய் பணத்தையும் நீண்ட நாட்களாகியும் திருப்பித் தரவில்லை என மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை நேரில் கேட்டும், “பணத்தையும் நகையையும் திருப்பித் தர முடியாது” என்று கூறி காயத்ரி சிவாவும், முத்துக்குமாரும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மருத்துவர் வீனா விலாசினி புகாரில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நிதி பரிமாற்றங்கள் மற்றும் நகை ஒப்படைப்பு தொடர்பான ஆவணங்களை சேகரித்து வரும் போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் முத்துக்குமார் முற்றிலும் மறுத்துள்ளார் என்பதும், போலீஸ் விசாரணையின் முடிவிலேயே இறுதி உண்மை தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
