தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பும் வகையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது 15,000 ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (TVK) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர். டிவிேக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாற்றுக்கட்சியிலிருந்து இணையும் மிகப்பெரிய தலைவர்கள் பட்டாளம் இதுவாகும்.

சென்னைக்கு அருகே உள்ள மகாபலிபுரத்தின் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், டிவிேக-வின் மூத்த தலைவர்களான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் இந்த இணைப்பு படலம் அரங்கேறுகிறது. இதற்காக கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 200 பேருந்துகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்களும் நிர்வாகிகளும் விழா மேடையை நோக்கி திரண்டு வந்துள்ளனர்.

இந்த பிரம்மாண்ட இணைப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ். வளர்மதி (திருச்சி), எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர்) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். இதுதவிர 208 அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்களும் டிவிேக-வில் ஐக்கியமாகின்றனர். கட்சி மாறுவதற்கு முன்னதாக சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “நாங்கள் எங்களின் அரசியல் பயணம் முழுவதும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்தோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிவிேக-வுடன் கூட்டணி வைக்குமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவர் எங்கள் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு, திமுகவின் ஆதரவோடு முதலமைச்சராக முயன்றார். அதிமுகவும் திமுகவும் ரகசிய உடன்பாடு போட்டுக் கொள்வது எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கைகளுக்கு எதிரானது” என இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த அதிரடி அரசியல் திருப்பம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.