தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையில் முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அதற்குள்ளாகவே அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. தவெக-விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 35 அமைச்சர்களுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் இயக்க காலத்திலிருந்தே விஜயுடன் பயணித்து மந்திரி பதவி வாங்கிய சிலர், அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

உறவினர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆதிக்கத்தை அனுமதிப்பது, தலைமையின் உத்தரவை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைச்சர்களின் ‘ஹிட் லிஸ்ட்’ தற்போது தயாராகி வருகிறது. இதன் அடிப்படையில், விரைவில் தேவையற்ற அமைச்சர்களை தூக்கவும், தகுதியானவர்களுக்கு கூடுதல் இலாகாக்களை வழங்கவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடி நீக்கப் பட்டியலில் முதற்கட்டமாக இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் மற்றும் ரவுடி ராக்கெட் ராஜாவுடன் எடுத்த பழைய புகைப்படங்கள் வைரலான விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

அதோடு, அமைச்சர் கீர்த்தனாவுடன் ஜெகதீஸ்வரி மோதல் போக்கில் ஈடுபட்டதும், பேனரில் பெயர் போடுவது தொடர்பாக அதிகாரிகளிடம் பொதுவெளியில் காரசாரமாக பேசியதும் தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களைத் தவிர, போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாஜகான் ஆகியோரின் இலாகாக்களும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரம், விசிக அமைச்சர் வன்னியரசுக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.

மற்றொருபுறம், அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா போன்ற மாஜிக்களுக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் அமைச்சரவையில் இடம் தரவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிகாரப்பூர்வமாக அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.