“கடந்த ஆட்சிகள்ல பணத்தை வாங்கிட்டு வேலை தராம ஏமாத்திட்டாங்க…” என்று கடந்த கால முறைகேடுகளை அம்பலப்படுத்திப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்துத் தருவதாகக் கூறி, ஒப்பந்ததாரர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை தராமல் ஏமாற்றியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு பணத்தைத் தந்து ஏமாற்றமடைந்த ஒப்பந்ததாரர்கள் அனைவரும் எவ்வித அச்சமுமின்றி உடனடியாகப் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அனைவரும் நேரடியாகத் தன்னிடமோ அல்லது [email protected] என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியிலோ, அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிடமோ தங்களது புகார்களைத் தாராளமாகப் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புகார் தெரிவிக்கும் ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் அனைத்தும் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், ஏமாற்றிய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி ஆக்ஷன் கடந்த ஆட்சிப் புள்ளிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
