பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும் வயதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜெயினம் ஜெயின், துபாயில் சொந்தமாக ஒரு ஏஐ (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா கோபுரத்தின் 141-வது மாடியில் தனது நிறுவனத்தின் அலுவலகத்தை அமைத்துள்ள ஜெயினம், துபாயின் மிக இளம் வயது ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நிறுவனங்களுக்குத் தேவையான மார்க்கெட்டிங், விற்பனை, வாடிக்கையாளர் சேவை, கன்டென்ட் உருவாக்கம் போன்ற பல பணிகளைத் தானியங்கி முறையில் செய்து தரும் ‘மேங்கோ இன்ஜின்’ (Mango Engine) என்ற ஏஐ தளத்தை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது இந்தத் தளம் சோதனை கட்டத்தில் இருந்தாலும், பல முன்னணி நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்த இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றன.

ஜெயினமிற்கு தொழிலதிபர் ஆவதற்கான முதல் விதை அவரது 6 வயதிலேயே விழுந்துவிட்டது. இவரது தந்தை தனது பிசினஸ் மீட்டிங் ஒன்றிற்கு முதன்முறையாக ஜெயினமை அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்துதான் அவருக்கு தொழில் உலகத்தின் மீது ஆர்வம் பிறந்தது. வெறும் புத்தகக் கல்வியோடு நின்றுவிடாமல், தனது கனவுக்காக 13 வயதில் வெறும் 105 நாட்களில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்துவிட்டு முழு நேரமாகத் தொழிலில் இறங்கினார்.

14 வயதிற்குள் இரண்டு பேடன்ட் (Patent) உரிமைகளைப் பெற்றுள்ள ஜெயினம், ஒரு சிறந்த ‘TEDx’ பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் வலம் வருகிறார். யூடியூபிலும் இவருக்கு 1.45 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். தனது 10 வயதில் ’50 நாள் சவால்’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களைச் சந்திக்க 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து நெட்வொர்க்கிங்கை பலப்படுத்திக் கொண்டார். “வெற்றிக்கு வயதோ, பட்டங்களோ தடையல்ல; புதிய தொழில்நுட்பங்களை கற்கும் தீவிர ஆர்வம் இருந்தால் புர்ஜ் கலிஃபாவின் உச்சியையும் தொடலாம்” என்பதை இந்த ‘ஜென் ஜி’ (Gen Z) நாயகன் நிரூபித்துள்ளார்.