இன்று முதல் நாடு முழுவதும் ஆதார், பாஸ்போர்ட், வாகனங்களின் விலை, கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தளத்தில் ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைக்க இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணம் இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வெளிநாடு செல்வோருக்கான பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும், தட்கல் விண்ணப்பக் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் தனிநபர் கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
கிரெடிட் கார்டு விதிமுறைகளைப் பொறுத்தவரை, சில பரிவர்த்தனைகளுக்கான ரிவார்டு புள்ளிகள் நீக்கப்பட்டு புதிய வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, 3 மாதத்திற்கு மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய ‘லவுஞ்ச்’களை இலவசமாகப் பயன்படுத்த ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் செலவிட வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, பொதுமக்களின் நலனுக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்காலிக விற்பனை மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகளை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இன்று முதல் முழுமையாகத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
