மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் டெல்சிபுஜுர்க் கிராமத்தில், காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் குர் என்பவர் தனது இரு கூட்டாளிகளுடன் வந்து, விவசாயி ஒருவரின் நிலத்திற்கு அருகே ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் குழி தோண்ட முயன்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலத்திற்கு அருகில் குழி தோண்டுவதற்கு விவசாயியும் அவரது சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதாப் சிங்கும் அவருடன் வந்தவர்களும் அவர்களைப் கெட்ட வார்த்தைகளால் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி தனது கைபேசி மூலம் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அவரது தந்தை தினேஷ் சென், மாமாக்களான ராஜாராம் சென், முன்னாலால் சென் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த மோதலைத் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றபோது, காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் குர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை  வெளியே எடுத்து,  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். “இங்கு ஜேசிபி இயந்திரம் கண்டிப்பாகச் செயல்படும், உடனடியாக இங்கிருந்து ஓடிவிடுங்கள், இல்லையென்றால் உங்களைக் கொன்றுவிடுவேன்” என்று அவர் தங்களைக் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்குச் சென்று, குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.