மகாராஷ்டிர மாநிலம் அகாத்வாடே கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டன் மற்றும் தயிர் சாப்பிட்ட விவசாயத் தம்பதியருக்கு திடீரென கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் உணவு நச்சுத்தன்மை காரணமாக துவார்காபாய் சாந்தாராம் ஹியாலிஜ் (68) என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது கணவர் சாந்தாராம் நானாஜி ஹியாலிஜ் (78) என்பவர் மாலேகானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வயல் வேலைகளை முடித்துவிட்டு, இரவில் குடும்பத்துடன் மட்டன் உணவைச் சாப்பிட்டுவிட்டு தயிர் குடித்த பிறகு இந்த தம்பதியருக்கு நள்ளிரவில் கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு துவார்காபாயை பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சாந்தாராமின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மட்டன் சாப்பிட்டதால் நச்சுத்தன்மை ஏற்பட்டதா அல்லது தயிர் சாப்பிட்டதால் ஏற்பட்டதா என்பதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும் மருத்துவக் குழுவினரும் உணவின் மாதிரிகளைச் சேகரித்து, புனேயில் உள்ள ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
