ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி நிறுவனம் ஒன்றில் தங்கி ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகி வந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியான ஜெயா ஸ்ரீ, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ராஜஸ்தானையும் உலுக்கியுள்ளது.
சனிக்கிழமை இரவு 9 மணி வரை தனது பெற்றோரிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு, மெஸ்ஸுக்குச் செல்வதாகக் கூறிய ஜெயா ஸ்ரீ, அதன்பின் தாயை அழைக்காததால் பதற்றமடைந்த குடும்பத்தினருக்கு, இரவு 11 மணியளவில் அவர் ஒரு மேம்பாலத்தின் கீழ் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தனது தந்தையிடம் வெறும் 30 வினாடிகள் மட்டுமே அழுதுகொண்டே பேசிய ஜெயா ஸ்ரீ, “அப்பா என்னைக் காப்பாற்றுங்கள், என் உடல் முழுவதும் பலத்த வலி இருக்கிறது, நான் இறந்துவிடுவேன்” எனக் கதறிய சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.
தனது சமூகத்திற்கே பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்து, ஒரு வெற்றிகரமான பொறியாளராக வேண்டும் என்ற பெரும் கனவுகளுடன் பீகாரில் இருந்து வந்த மாணவி ஜெயா ஸ்ரீ எப்படி மேம்பாலத்தின் கீழ் சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை நடத்தி தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
