உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தும்ரி சவகிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அனிருத் (55), ஷாலு (30) மற்றும் மாதுரி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் கோரக்பூருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

பதான் பகுதியை அவர்கள் நெருங்கியபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் கொடூரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகியுள்ளன. கார் மோதிய வேகத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்த மூவரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.