“கைல கன் இருந்தா சும்மா கெத்தா இருக்கும்ல!”—பர்தா அணிந்த பெண் ஒருவர் அமைதியாக சாலையில் நடந்து செல்ல, அப்போது பைக் ஒன்றில் வரும் நபர் அவரிடம் வம்பு இழுக்கிறார். அடுத்த நொடியே யாரும் எதிர்பாராத விதமாக, அந்தப் பெண் தன் பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து அந்த நபரை நோக்கிச் சுட, பயந்துபோன அந்த பைக்கர் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து பைக்கை திருப்பி ஓட்டம் பிடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பார்ப்போரைக் பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் செம வைரலாகி வருகிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது. ​ஆனால், இந்த வீடியோவின் பின்னணியில் இருக்கும் அசல் உண்மை என்னவென்று பார்த்தால் அது அடியோடே வேறு! உண்மையில் இது ஏதோ நிஜமாக நடந்த சம்பவம் அல்ல, முழுக்க முழுக்க ஏஐ (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான வீடியோ ஆகும். உற்று கவனித்தால் இது ஏஐ வீடியோ என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இருப்பினும், “இது ஏஐ வீடியோவாகவே இருந்தாலும், நிஜ வாழ்க்கையிலும் பெண்களுக்கு பாதுகாப்புக்காக உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்கப்பட்டால், இப்படிப்பட்ட காமுகர்களுக்குச் சரியான பாடமாக இருக்கும்” என நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கக் கருத்துக்களைக் கொட்டி தீர்த்து வருகின்றனர்.