திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று விடிய விடிய அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, எ.வ.வேலுவின் காரிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காரை முற்றுகையிட்டு அக்குவேறு ஆணிவேறாகச் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த ஒரு முக்கிய சூட்கேஸை அதிகாரிகள் கைப்பற்றினர்; அந்தச் சூட்கேஸில் இருந்த ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கிய ஃபைல்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற பிரம்மாண்ட முறைகேடுகள் தொடர்பாக, ‘அறப்போர் இயக்கம்’ லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகுந்த ஆதாரங்களுடன் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்திருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இந்த மெகா கூட்டுச் சோதனையை முடுக்கிவிட்டுள்ளது. சட்டமன்றத்தில் எ.வ.வேலு கேள்வி எழுப்பிய பரபரப்பு அடங்குவதற்குள், அறப்போர் இயக்கத்தின் புகாரால் அவரது கார் மற்றும் வீடுகளில் இந்த அதிரடி ரெய்டு பாய்ந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.