காவல்துறை என்றாலே சட்டம், ஒழுங்கு, லத்தி என்ற பிம்பங்களுக்கு மத்தியில், அவர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் மட்டுமல்ல, இக்கட்டான சூழலில் ஒரு தாயாகவும் தந்தையாகவும் மாறி அரவணைப்பார்கள் என்பதை நிரூபிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. கான்பூரில் உள்ள புகழ்பெற்ற சீலிங் ஹவுஸ் பள்ளிக்கு அருகில் (போலீஸ் கமிஷனர் குடியிருப்புக்கு மிக அருகில்), சுமார் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினரை பிரிந்து, எங்குச் செல்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே தனியாக நின்றுள்ளார். இதைப் பார்த்த உத்தரப்பிரதேச போலீஸார், அந்தச் சிறுமியைப் பத்திரமாக மீட்டுத் தங்களது குவால்தோலி (Gwaltoli) காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

​காவல் நிலையத்தில் அந்தச் சிறுமிக்குத் தங்களது சொந்தக் குழந்தையைப் போல உணவளித்து, பாசத்தோடு கவனித்துக் கொள்ளும் போலீசாரின் மனிதநேயம் சோசியல் மீடியாவில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. விசாரணையில், அந்தச் சிறுமி தனது பெயரை ‘கங்கா’ என்று மட்டுமே கூறுகிறாள். ஆனால், அவளது ஒஞ்சு வயதின் காரணமாகத் தனது பெற்றோரின் பெயரையோ அல்லது வீட்டின் முகவரியையோ தெளிவாகக் கூற முடியாமல் தவித்து வருகிறாள்.

தற்போது குவால்தோலி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கும் இந்தச் சிறுமி கங்காவின் பெற்றோர் அல்லது உறவினர்கள் குறித்து யாருக்கேனும் ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகக் கான்பூர் குவால்தோலி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.