மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியில், கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே ஹோட்டல் அறை மற்றும் ஒழுங்கீன விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள மாபெரும் மோதல் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் அதிர வைத்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தோற்று, பாகிஸ்தான் அணி தொடர்ந்து தனது 4-ஆவது தோல்வியைப் பதிவு செய்து திணறி வருகிறது. இந்த மோசமான சூழ்நிலைக்கு நடுவே, பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும் அதிகாரப்பூர்வமற்ற தலைமைப் பயிற்சியாளருமான வஹாப் ரியாஸுக்கும், கேப்டன் பாத்திமா சனாவுக்கும் இடையே அணியைத் தேர்வு செய்வதில் பயங்கர முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் சீனியர் வீராங்கனை ஆலியா ரியாஸின் கணவர் அலி யூனிஸ், வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே தங்கியிருந்ததற்கு கேப்டன் பாத்திமா சனா கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை வெளியேற்ற வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், போட்டிக்கு முந்தைய நாள் அணியின் முக்கியப் பயிற்சி ஆட்டம் திட்டமிடப்பட்டிருந்த போது, அதைப் புறக்கணித்துவிட்டு ஆலியா ரியாஸும் அவரது கணவரும் ஊர் சுற்றச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் பாத்திமா, வங்கதேச போட்டிக்கு ஆலியாவை அணியில் சேர்க்கக் கூடாது என கறார் காட்டியுள்ளார்;

ஆனால், பயிற்சியாளர் வஹாப் ரியாஸ் பிடிவாதமாக ஆலியாவை விளையாட வைத்த நிலையில், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததுடன் ஆலியாவும் சொதப்பினார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கேப்டன் பாத்திமா சனா, “அணியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத உங்களால்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது” என ஒட்டுமொத்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலேயே பயிற்சியாளர் வஹாப் ரியாஸை நறுக் என முகத்தெதிரே வெளுத்து வாங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மகளிர் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே பயிற்சியாளர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது வீராங்கனைகளிடையே கோஷ்டி பூசலும், பயிற்சியாளர்களின் பேச்சை வீரர்கள் கேட்காத நிலைமையும் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த அதிரடித் தகவல் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.