தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆளும் திமுக அரசு மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டதாக ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், “அரசியல் என்பது இரக்கமற்றது; எனினும், தகுதியான விஷயங்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். முதலீடுகளைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்ப்பதில் ஆந்திராவும் தமிழ்நாட்டின் திமுக அரசும் கடுமையாகப் போட்டியிட்டன.
இந்த ஆரோக்கியமான போட்டியில் சில திட்டங்களை ஆந்திரா பெற்றது, சிலவற்றை இழந்தது. ஆனால், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்த நிறுவனங்களிடம் திமுக அரசு லஞ்சம் கேட்டதாக எந்தவொரு முதலீட்டாளரும் ஒருபோதும் புகார் கூறவில்லை. இந்த விஷயத்தில் திமுக அரசுக்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்; அவர்கள் முதலீட்டுச் செயல்முறையை மிகவும் தூய்மையாகவும், தொழில்முறை சார்ந்தும் அணுகினர்” என்று லோகேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாக இங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், ஆந்திர அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முதலீட்டுச் செயல்முறைகள் ஊழலற்ற முறையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தொழில்முறை அணுகுமுறையுடன் கையாளப்படுவதை அண்டை மாநில அமைச்சரே டெல்லி மாநாட்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாராட்டியிருப்பது, தமிழக அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
