தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் ‘ஃபுட் ரிவ்யூ’ (Food Review) செய்யும் நபர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை மிகக் கடுமையான புதிய கட்டுப்பாடுகளையும் அதிரடி வழிகாட்டு நெறிமுறைகளையும் விதித்துள்ளது. இனிவரும் காலங்களில், உணவு பாதுகாப்புத்துறையின் முறையான உரிமம் பெற்றுள்ள உணவகங்களில் மட்டுமே யூடியூபர்கள் உணவு குறித்த விமர்சன வீடியோக்களை எடுக்க வேண்டும் என்று அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த அதிரடி உத்தரவு, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஃபுட் விளாகர்கள் மற்றும் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த புதிய நெறிமுறைகளின்படி, உணவகங்களுக்குச் செல்லும் யூடியூபர்கள் சும்மா சாப்பாட்டை மட்டும் ரிவ்யூ செய்யாமல், அங்குள்ள சில முக்கிய விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த உணவகத்திற்கு முறையான உரிமம் உள்ளதா, அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் சரியாகப் பின்பற்றுகிறார்களா, சமையல் செய்யும் பணியாளர்கள் அனைவரும் கையுறை மற்றும் தலையுறை அணிந்துள்ளனரா என்பதைப் பார்க்க வேண்டும். அதுமட்டுமன்றி, உணவகங்களில் வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவுகள் தரமான முறையில் உள்ளதா போன்ற விபரங்களையும் கவனித்துதான் வீடியோக்களைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக உணவு பாதுகாப்புத்துறை யூடியூபர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
