ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஒழுக்கநெறி போலீசார், தாடி நீளம் குறைவாக இருந்ததாகக் கூறி ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூட்டு அமைப்புகளில் பணியாற்றும் 20 மனிதாபிமான உதவி ஊழியர்களை அதிரடியாகக் கைது செய்துள்ள விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் எல்லையோர இஸ்லாம் கலா (Islam Qala) பகுதியில் பணியாற்றி வந்த இந்த ஊழியர்களின் தாடி தாலிபான்களின் சட்டப்படி மிகச் சிறியதாகவோ, டிரிம் செய்யப்பட்டோ அல்லது ஷேவ் செய்யப்பட்டோ இருந்ததால் அவர்கள் சனிக்கிழமை அன்று தாலிபான்களின் ஒழுக்கநெறி அமைச்சகத்தால் (PVPV) சிறைபிடிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட கடுமையான 35 விதிகள் கொண்ட ஒழுக்கநெறி சட்டத்தின்படி, பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் விசித்திரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்கள் அனைவரும் தங்களது கைப்பிடி அளவிற்கு (Clenched fist) கட்டாயமாகத் தாடி வளர்க்க வேண்டும் என்றும், ஜீன்ஸ் பேண்ட், ஷார்ட்ஸ் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புருவங்களை டிரிம் செய்வதற்கும், மேற்கத்திய பாணி ஹேர் ஸ்டைல்களுக்கும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தாடியைச் சிரைப்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாடி விதியை மீறியதற்காகப் பல சலூன்கள் மூடப்பட்டு, பார்பர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட ஐநா உதவி ஊழியர்களில் சிலர் சனிக்கிழமையும், மீதமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்த விசித்திர கெடுபிடி வீடியோக்களும் செய்திகளும் சோசியல் மீடியாவில் உலகளவில் கடுமையான கண்டனங்களை எழுப்பி, வைரலாகி வருகிறது.