“சாமி எனக்குள்ள இறங்கி இருக்கிறதால என் கால்ல விழுந்து அந்தப் பாலைக் குடிச்சா உங்க கஷ்டமெல்லாம் தீந்துடும்னு எங்களை நம்ப வச்சு, 17 வருஷமா என் வாழ்க்கையையே நரகமாக்கிட்டான் !”

என்று புனே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் அழுதுகொண்டே ஆக்ரோஷமாக வாக்குமூலம் அளித்திருப்பது ஒட்டுமொத்த மகாராஷ்டிர மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.

புனே உபலே நகரைச் சேர்ந்த போலி சாமியார் ராதா மோகன் மிஸ்ரா (59), அவனது கூட்டாளி சுவாமி கன்வல் நயன் (58) மற்றும் இவர்களுக்குத் தரகு வேலை பார்த்து வந்த 6 பெண்கள் உட்பட மொத்தம் 8 பேரைத் தனிப்படை போலீஸார் நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்;

கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்த போலி சாமியார், உயர் கல்வி கற்ற அந்த இளம் பெண்ணை 17 ஆண்டுகளாகத் தனது மூடநம்பிக்கை வலையில் சிறை வைத்து, பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணைத் தனியாகச் சிறுநீர் கழிக்க வைத்து கொடுமைப்படுத்தியது, சரமாரியாக அடிப்பது, உடலில் கரண்ட் ஷாக் (மின் அதிர்ச்சி) கொடுப்பது போன்ற மனிதாபிமானமற்ற கொடூரங்களை அரங்கேற்றியது மட்டுமன்றி, அவளது கணவரிடமிருந்து கட்டாயப் படுத்திப் பிரித்து, அவளுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களையும் இந்த போலி பாபா தன் பெயருக்கு எழுதி வாங்கியுள்ள அதிர்ச்சித் தகவலும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது ஆசிரமத்திற்குள் புகுந்து சல்லடை போட்டுச் சோதித்த போலீஸார், அங்கிருந்த ஏராளமான ரகசிய பென் டிரைவ்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளைக் கைப்பற்றியுள்ளனர்; இருப்பினும், இந்த டிஜிட்டல் சாதனங்கள் அனைத்தும் அதிநவீன ‘பாஸ்வேர்டு’ (Password) கொண்டு லாக் செய்யப்பட்டுள்ளதால் விசாரணையில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், இந்த லாக்-கை உடைக்கச் சைபர் கிரைம் வல்லுநர்களின் உதவியை நாடியுள்ளனர்.