உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள  கிராமம் ஒன்றில், ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில், தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை யாரோ கடத்திச் சென்றதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் விடிய விடிய தேடிய நிலையில், சனிக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே உள்ள ஒரு வயல்வெளியின் தகரக் கொட்டகை பகுதியில், ரத்தக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை மீட்கப்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, நிலைமை மோசமடைந்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காக பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூரச் செயல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. சண்டிகரில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்திருந்த, பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினரான 12 வயது சிறுவன் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிறுவனை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலும், இறுதியில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

சம்பவத்தன்று இரவு தான் மது அருந்திவிட்டு, மொபைல் போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்த போதையில் இத்தகைய பாதகச் செயலில் ஈடுபட்டதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். அவனது மொபைல் போனை சோதித்த போலீஸார், அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளத் தேடல்களும் இருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.