நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு கடுமையான கெடுபிடிகளுடன் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் தேர்வு மையம் மாறி வந்த மாணவி ஒருவரை, கல்லூரி நிர்வாகம் தங்களது சொந்த வாகனத்தில் பத்திரமாகச் சரியான தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து அவரது எதிர்காலத்தைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர், தவறுதலாக யாதவா ஆண்கள் கல்லூரி தேர்வு மையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, யாதவா மகளிர் கல்லூரி மையத்திற்கு வந்துள்ளார்.
பிற்பகல் 1.30 மணிக்கு மேல் தேர்வு மையத்தின் கேட் மூடப்படும் என்ற கடுமையான விதிமுறை இருந்ததால், தான் தவறான மையத்திற்கு வந்துவிட்டதை அறிந்த மாணவி செய்வதறியாது திகைத்து, கண்ணீருடன் கடும் பதற்றமடைந்தார். இதைக் கவனித்த யாதவா கல்லூரி நிர்வாகத்தினர், சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் செயல்பட்டனர். மாணவியின் பதற்றத்தைத் தணித்து, அவசர அவசரமாகக் கல்லூரிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏற்றி, 1.30 மணி கெடு முடிவதற்குள் அவரைச் சரியான தேர்வு மையத்திற்குப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த மின்னல் வேக மனிதாபிமான நடவடிக்கையால் அந்த மாணவி இன்று தங்கு தடையின்றி தேர்வு எழுத முடிந்தது. மாணவியின் மருத்துவக் கனவு வீணாகாமல் தடுத்த மதுரை யாதவா கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயலை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.
