சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அன்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே இத்தாலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்க “பிச்சை எடுத்தார்” என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்கு மெலோனி “இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கதை” என மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மெலோனியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். ​தனது பதிவில் ட்ரம்ப், ஈரான் உடனான போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்கள் இத்தாலியின் வான்வழி ஓடுதளங்களைப் பயன்படுத்த மெலோனி அனுமதிக்கவில்லை என்றும், நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா இத்தாலியை எப்போதும் பாதுகாத்து வரும் நிலையில் இது ஒரு துரோகச் செயல் என்றும் சாடியுள்ளார்.

மேலும், இத்தாலியில் மெலோனியின் புகழ் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதால், அமெரிக்காவை எதிர்த்ததால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது போர் முடிவுக்கு வரும் வேளையில் மீண்டும் மெலோனி தனுடன் நட்பு பாராட்ட விரும்புவதாகவும் ட்ரம்ப் கிண்டலடித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த அதிரடி விமர்சனத்தால் இத்தாலி வெளியுறவு அமைச்சர் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே பெரும் ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.