உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள கர்ணபிரயாகை நகரில், ஹேமகுண்ட் சாஹிப் நோக்கிச் சென்று கொண்டிருந்த சீக்கிய யாத்ரீகர்களுக்கும், அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் திடீரென பயங்கர வன்முறை மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ணபிரயாகையின் பரபரப்பான சந்தைப்பகுதியில் இந்த மோதல் வெடித்த சில நிமிடங்களிலேயே, சீக்கிய யாத்ரீகர் ஒருவர் அங்கிருந்த உள்ளூர் மக்களை நோக்கி வாளால் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
कर्णप्रयाग में हेमकुंड साहिब जा रहे सिख श्रद्धालुओं और स्थानीय लोगो में विवाद हो गया, इस वीडियो में आप देख सकते है कि फिर कैसे लाठी डंडे चले और नंगी तलवारे लहरा रही है। एक स्थानीय घायल व्यक्ति को हायर सेंटर रेफर किया गया है। pic.twitter.com/FUSygD1pjf
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) June 16, 2026
இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்த உள்ளூர் வியாபாரிகளும் பொதுமக்களும் வீதிகளில் திரண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையை அதிரடியாக முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் பத்ரிநாத் மற்றும் ஹேமகுண்ட் சாஹிப் நோக்கிச் செல்லும் யாத்ரீகர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த மோதலுக்கான அசல் காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்களை வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவெளியில் ஆயுதங்களை எடுத்து வந்தது எப்படி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் இந்த வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதால், “யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் !” என்று போலீஸார் பொதுமக்களுக்குக் கறாரான வேண்டுகோள் விடுத்து அமைதி காக்க வலியுறுத்தியுள்ளனர்.
