சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுநாள் வரை பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியானது, சிஎம்டிஏ மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையோடு அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசாணை பெற்ற பின்னரே வழங்கப்பட்டு வந்தது.
இந்த நீண்ட நடைமுறையினால் கட்டிடதாரர்களுக்கு ஏற்பட்டு வந்த கடுமையான காலதாமதத்தைத் தவிர்ப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் விரைவாக ஒப்புதல்களை வழங்குவதற்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி தற்போது இந்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, இனிவரும் காலங்களில் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை வழங்குவதற்காக அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டிட விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமே (சிஎம்டிஏ) நேரடியாக இத்தகைய திட்ட அனுமதிகளை வழங்கலாம் எனத் தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜயின் இந்த அதிரடி முடிவின் மூலம் கட்டிட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை மிக விரைவாக நடைபெறும் என்பதால் கட்டிடதாரர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
