கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாதேவபுரா பகுதியில், 32 வயதான ஹோம் கார்டு (Home Guard) பெண் அதிகாரி மஞ்சுளா என்பவர், அவரது கணவன் பிரதீப்பால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.

மஞ்சுளாவிற்கும் பிரதீப்பிற்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவன் பிரதீப்பிற்கு ஆன்லைன் பெட்டிங் எனப்படும் ஆன்லைன் சூதாட்டக் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்ததோடு, மஞ்சுளாவின் நடத்தை மீதும் அவர் தொடர்ந்து தேவையில்லாமல் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கடந்த ஒன்றரை மாதங்களாக மஞ்சுளா தனது குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சுளாவின் தாயார் வீட்டிற்குள் தனது ஜாக்கெட்டில் கத்தியை மறைத்து எடுத்துக்கொண்டு நுழைந்த பிரதீப், முதலில் மஞ்சுளாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுத் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கெஞ்சியுள்ளார்.

ஆனால், மஞ்சுளா வர மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரதீப், தனது தாய் மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் கண்முன்னே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுளாவை 20-க்கும் மேற்பட்ட முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தத் துணிகரக் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக பிரதீப் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், “எனது ஆன்லைன் சூதாட்டப் பழக்கத்தால் என் குடும்பமே சீரழிந்துவிட்டது, என் மனைவி இல்லாமல் என்னால் வாழ முடியாது, மாலையில் அவளிடம் என்னுடன் வருமாறு மீண்டும் கேட்பேன், அவள் வர மறுத்தால் அவளை அங்கேயே கொலை செய்துவிடுவேன்” என்று கொடூரமாகப் பேசியுள்ளார்.

மனைவியைக் கொலை செய்த பின்னர், அதே கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கும் முயன்ற பிரதீப்பை தற்பொழுது போலீஸார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் ஒரு ஹோம் கார்டு பெண் அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம், தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.